ஈரோட்டில் பயங்கரம்: அரிவாளால் வெட்டி வாலிபர் படுகொலை

ஈரோட்டில், அரிவாளால் வெட்டி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2020-01-27 23:30 GMT
ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பகுதியில், காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் உள்ள வயல்வெளியில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் பின் தலையில் அரிவாளால் வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இறந்து கிடந்த வாலிபரின் உடல் அருகே கிடந்த கற்களில் ரத்த கறையும் இருந்தது. மது பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் கிடந்தன. இதனால் மதுபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், ரத்தம் உறைந்து காணப்பட்டதால் அவர் நேற்று முன்தினம் இரவே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு டவுன் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜு விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபர், ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீரா மோப்பம் பிடித்தப்படி, வாலிபரின் உடல் கிடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள வாழைத்தோட்டம் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனால் நாகராஜை கொலை செய்தவர்கள் வாழைத்தோட்டம் வழியாக தப்பி சென்றிருக்கலாம் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நாகராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘இங்குள்ள வயல்வெளிகளில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வந்து மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது. எனவே எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

ஈரோட்டில் வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்