பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கு: மத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் அஜித்பவார் காட்டம்

பீமா-கோரேகாவ் வன்முறை வழக்கு பிரச்சினையில் கருத்து தெரிவித்த அஜித்பவார், மத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்கவேண்டும் என கூறினார்.

Update: 2020-01-27 22:43 GMT
புனே,

புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சாதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு முந்தைய நாள் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாடு தான் காரணம் என புனே போலீசார் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி காலத்தில், இந்த வழக்கை போலீசார் கையாண்ட விதம் சந்தேகம் அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டினார். இதனால் மறுவிசாரணை நடத்த மராட்டிய அரசு முடிவு செய்து இருந்த நிலையில், மாநில அரசின் ஒப்புதல் பெறாமலேயே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய அரசு மாற்றிக்கொண்டது.

இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய மற்றும் மாநில அரசுகள் அவரவர் வேலைகளை பார்க்கவேண்டும். தேசிய அளவிலான பிரச்சினைகள் தலையெடுக்கும்போது மட்டும் மத்திய அரசு தலையிட்டால் போதுமானது.

நான் சமீபத்தில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்குடன் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்தேன். விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு குறித்து எங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. வழக்கை விசாரிக்க அவர்கள் கடுமையாக முயற்சிப்பதை நான் உணர்ந்தேன்.

ஏதேனும் வன்முறைகள் நடந்தால், அந்த சம்பவத்தை விசாரித்து, அதன் அடிப்படை உண்மைகளைச் சரிபார்க்கவேண்டும். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மாநில அரசு விரும்பியது. ஆனால் திடீரென்று மத்திய அரசு தலையிட்டு வழக்கை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்