12-ந்தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம்

12-ந்தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதையொட்டி பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

Update: 2020-01-28 22:36 GMT
புதுச்சேரி,

புதுவை சிறப்பு சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப ஜி.எஸ்.டி. வரியை திருத்தம் செய்து சட்டமாக்கி கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை அமல்படுத்தப் போவதில்லை என அந்தந்த மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதுவை மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் ஆகியவற்றை எதிர்த்தும், ஜி.எஸ்.டி. சட்டத்தை சீரமைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் புதுவை அமைச்சரவை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசு துறை செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிறப்பு சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும், ரோடியர் மில்லை தொடர்ந்து இயக்குவது குறித்த அம்சங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் அரசு சார்பு செயலர் மற்றும் தலைமை செயலர் வரை உரிமைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்துள்ள நிலையில் இதுபற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் கூடி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்