பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - டிஜி.பி.சைலேந்திரபாபு ஆய்வு

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தீயணைப்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

Update: 2020-01-30 22:15 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தீயணைப்புத்துறை சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வாகன நிறுத்துமிடம், மக்கள் அதிக அளவில் கூடும் இடம், யாகசாலை பூஜை நடைபெறும் இடம் மற்றும் கோவில் முன்பு உள்ளிட்ட இடங்களில் தீயணைப்புத்துறையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளனர்.

இதற்காக தஞ்சை தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருவாருர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். இன்னும் ஓரிருநாளில் வெளி மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வர உள்ளனர். மொத்தம் 425 தீயணைப்பு வீரர்கள் கும்பாபிஷேக பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் முக்கிய இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளனர். யாகசாலை நடைபெறும் இடம் , பெரியகோவில் முன்பு, சத்யா விளையாட்டு அரங்கம், மணிமண்டபம், திலகர் திடல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட உள்ளனர்.

இதற்காக தீயணைப்பு வாகனங்கள், புகை அடிக்கும் வாகனம் என 27 வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 5 புல்லட் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரப்பர் படகு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் அவர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

முன்னதாக தஞ்சை சிவகங்கை பூங்காவில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், உபகரணங்களை, ரெயில்வே டி.ஜி.பி.யும், தீயணைப்புத்துறை இயக்குனருமான(பொறுப்பு) சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார்.மேலும் பெரியகோவில் யாகசாலை நடைபெறும் இடம், தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றை தீயணைப்பு வீரர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் சிவகங்கை பூங்கா வளாகத்தில் டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமாரி, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் இளஞ்செழியன்(தஞ்சை), விவேகானந்தன்(கரூர்), செழியன்(அரியலூர்), முருகேசன்(திருவாரூர்), தாமோதரன் (பெரம்பலூர்) மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் செய்திகள்