ஆத்தூர் அருகே, லஞ்சம் வாங்கிய வழக்கில், வன ஊழியர்களுக்கு 2 ஆண்டு சிறை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு

ஆத்தூர் அருகே லஞ்சம் வாங்கிய வழக்கில் வன ஊழியர்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2020-01-30 22:00 GMT
சேலம்,

ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் தேனூற்றுவாடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ஜடயகவுண்டம்பட்டியில் வனஇடத்திற்கு அருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் அருகே முட்டல் கல்லாநத்தம் மண் பாதை வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த மண் பாதை கோர்ட்டு உத்தரவின்படி வனத்துறைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

இதனால் மண்பாதை வழியாக பொதுமக்கள் செல்லக்கூடாது என முட்டல் வனக்காவலர் கோபாலகிரு‌‌ஷ்ணன், வன கண்காணிப்பாளர் பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் சீனிவாசன் பேசினார். அதற்கு அவர்கள் பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக ரூ.15 ஆயிரம் வசூலித்து வழங்கினால் மண் பாதையை பயன்படுத்தலாம் என கூறியுள்ளனர். இதற்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் தருவதாக சீனிவாசன் அவர்களிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் சீனிவாசனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கோபாலகிரு‌‌ஷ்ணன், பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிரு‌‌ஷ்ணன், பாலகிரு‌‌ஷ்ணன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்