அரசியலமைப்பை மாற்ற நினைக்கும் பா.ஜனதாவினரே தேசதுரோகிகள்; சித்தராமையா குற்றச்சாட்டு

அரசியலமைப்பை மாற்ற நினைக்கும் பா.ஜனதாவினரே தேசதுரோகிகள் என்று சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

Update: 2020-01-31 00:24 GMT
பெங்களூரு, 

நம் நாடு மதத்தின் அடிப்படையில் உருவாகவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சாதி, மதம் போன்ற வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருக்கும் நாடாகும். தற்போது நமது நாட்டில் அரசியலமைப்பை மாற்றி அமைக்க மத்திய பா.ஜனதா அரசு துடிக்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டது. அதற்கான வேலையில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வந்தது.

தற்போது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலமாக நாட்டை துண்டாக்கும் வேலையில் பா.ஜனதா அரசு ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பை மாற்ற எந்த ஒரு அரசாலும் முடியாது. 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி நாட்டின் கருப்பு நாளாகும். தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொல்லப்பட்ட தினமாகும்.

மகாத்மா காந்தியை கொலை செய்ய 6 முறை முயற்சி நடந்தது. இறுதியாக 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பின்னால் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன. மகாத்மா காந்தி அகிம்சை வழியிலும், அமைதி முறையிலும் போராடி நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார். அவரது வழியில் நமது நாட்டு இளைஞர்கள் செயல்பட வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுவுக்கு எதிராக பேசுபவர்களை பா.ஜனதாவினர் தேசதுரோகிகள் என்று கூறி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் தேசதுரோகிகள் இல்லை. அரசியலமைப்பை மாற்ற நினைக்கும், குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நாட்டை துண்டாக்க துடிக்கும் பா.ஜனதாவினர் தான் தேசதுரோகிகள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்