ஊரக புத்தாக்க திட்ட விளக்க கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

தமிழக ஊரக புத்தாக்க திட்டம் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை கூட்டம் மற்றும் திட்ட விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2020-01-31 22:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக் டர் அலுவலக கூட்டரங்கில் தமிழக ஊரக புத்தாக்க திட்டம் தொடர்பான மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை கூட்டம் மற்றும் திட்ட விளக்கக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பகுப்பாய்வு அறிக்கை புத்தகத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டு பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில், தமிழக ஊரக புத்தாக்க திட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் முதல் கட்டமாகவும், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி வட்டாரங்களில் 2-ம் கட்டமாகவும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு வங்கிகடன் உதவி வழங்குதல், இணை மானிய திட்டம் வழங்குதல் மற்றும் இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதன் மூலம் தொழில் மேம்பாடு அடைய செய்து, அதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடைய செய்வதாகும்.

இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த தொழில் முனைவோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் மற்றும் இளைஞர்களில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர், தொழில் குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் ஆகியோர் பயன்பெற உள்ளனர். எனவே அனைத்து துறை அலுவலர்களும் தமிழக ஊரக புத்தாக்க திட்ட செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குனர்கள் சுரேஷ், திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) ராஜசுரேஷ்வரன், மாவட்ட செயல் அலுவலர்(பொறுப்பு) தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் பிரேம்குமார், அனைத்து துறை அரசு அலுவலர்கள், தமிழக ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர்கள், இளம் வல்லுனர்கள், வட்டார அணி தலைவர்கள் மற்றும் திட்ட செயல்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்