நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-02-01 23:00 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தமிழக, ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. பள்ளிப்பட்டு பஸ்நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் பள்ளிப்பட்டு பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகளால் கூட்டம் நிரம்பி இருக்கும். பள்ளிப்பட்டு பஸ்நிலையத்தில் இருந்து சென்னைக்கு சில மாதங்களுக்கு முன் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

தற்போது அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது. பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து சென்னை செல்ல நேரடி பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பலர் ஆந்திர மாநிலம் ஏகாம்பரகுப்பம் சென்று அங்கிருந்து ரெயில் ஏறி சென்னை செல்கின்றனர். சிலர் திருத்தணி சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்து சென்னை செல்கின்றனர்.

இதனால் பயணிகளுக்கு பஸ் கட்டணம் மற்றும் நேரமும் வீணாகிறது. மேலும் அம்மையார்குப்பம் முதல் புத்தூர் வரை இயங்கி வந்த அரசு பஸ், வேலூருக்கு இயங்கி வந்த பஸ், காஞ்சீபுரத்திற்கு இயங்கி வந்த பஸ், திருத்தணிக்கு இயங்கி வந்த பஸ், நாராயணவனம் வரை இயங்கி வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

கோரிக்கை

சென்னைக்கு ரெயிலில் செல்லும் பயணிகள் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் மீண்டும் ரெயில் ஏறி இரவு 7 மணியளவில் திருத்தணி வந்து பள்ளிப்பட்டு திரும்ப அந்த நேரத்தில் பஸ் இல்லாமல் இரவு 10 மணிவரை காத்திருந்து அதன் பிறகு பஸ் ஏறி இரவு 11½ மணிக்கு வீடு திரும்புகின்றனர்.

இதனால் பயணிகள் குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வருகிற பெண்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். வேலூருக்கு செல்லும் பயணிகள் சோளிங்கர் அல்லது சித்தூர் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்து வேலூர் செல்கின்றனர்.

சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பள்ளிப்பட்டு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்