கடலூரில் 3,698 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூரில் 3,698 மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

Update: 2020-02-01 23:00 GMT
கடலூர்,

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அருட்தந்தை அருள்நாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் 3,698 பேருக்கு ரூ.1½ கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

பணிநியமன ஆணை

மேலும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் 2 பேருக்கு வாரிசு அடிப்படையில் கண்டக்டருக்கான பணிநியமன ஆணையை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல பொதுமேலாளர் செல்வமணி ஆகியோர் வழங்கினர்.

இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் குமரன், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், கடலூர் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, கடலூர் நகர துணை செயலாளர் கந்தன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், அன்பு, ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மணி, வெங்கட்ராமன், அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர்கள் (நியமனம்) தியாகராஜன், சுந்தரம்(வணிகம்) மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்