திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

Update: 2020-02-03 21:30 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று காலை தெப்ப முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமி எழுந்தருளினார்.

இதனையடுத்து தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி பதினாறு கால் மண்டபம் அருகே தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. இதில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். அங்கு திரளாக கூடி இருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”, வீரவேல்முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து பய பக்தியுடன் இழுத்தனர்.

தேர் கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் மெல்ல, மெல்ல நகர்ந்து ஆடி அசைந்து வலம் வந்து நிலை நின்றது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. காலையில் 3 முறை தெப்பக்குளத்தில் சாமி வலம் வருகிறார். அதே போல இரவில் மின்னொளியில் தெப்ப மிதவையில் அமர்ந்து சாமி வலம் வருகிறார். ஆகவே அங்கு பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்