வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 லட்சம் உதவித்தொகை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 97 பேருக்கு ரூ.80 லட்சம் உதவித் தொகையை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Update: 2020-02-03 23:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் நினைவு தினத்தன்று மனித நேய நாளாகவும், தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தன்று தீண்டாமையை அகற்றி அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உதவித்தொகை

தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 97 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சத்திற்கான காசோலையும், சிவகங்கை வட்டத்தை சேர்ந்த 14 பேர் மற்றும் திருப்பத்தூர் வட்டத்தை சேர்ந்த 17 பேருக்கும் வீட்டு மனைப் பட்டாவை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். மேலும் மனிதநேய விழிப்புணர்வு குறித்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிந்து, அலுவலக கண்காணிப்பு அலுவலர் கோபிநாத், தனி தாசில்தார்கள் காசி, ஜெயநிர்மலா, அரசு வக்கீல் சுரேஷ்குமார், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முருகன், சேவுகன், பரமசிவம், புரட்சித்தம்பி, கோட்டையன், ராமு, முத்து, விடுதி காப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்