பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்து, ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுத்த இளைஞர்கள்

பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி அமர்ந்து ஆபத்தான முறையில் இளைஞர்கள் செல்போனில் செல்பி எடுத்தனர்.

Update: 2020-02-04 06:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு மற்றும் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அது போல் தினமும் ராமேசுவரம் கோவிலுக்கு கார், வேன் உள்ளிட்ட பல வாகனங்கள் மூலம் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே பாம்பன் ரோடு பாலத்தில் வாகனங்களை நிறுத்தி கடலின் அழகையும் பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர்.

அது போல் ரோடு பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் வாகனத்தின் மேலே ஏறி நின்றும், சாலையின் குறுக்கே நின்றும் செல்பி எடுப்பது, இருசக்கரவாகனத்தில் வேகமாக செல்லும் போது தலையை வெளியில் நீட்டி செல்போனில் செல்பி எடுப்பது, சில நேரங்களில் தடுப்பு சுவரில் ஏறி நின்றும், அமர்ந்தும் ஆபத்தான முறையில் எடுப்பது என தொடர்கிறது.

இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் ஒரு காரில் வந்த 4 இளைஞர்கள், காரை ரோடு பாலத்தின் மைய பகுதி சாலையில் நிறுத்தி விட்டு ரெயில் பாலம் மற்றும், தூக்குப் பாலத்தையும் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு இளைஞர் திடீரென ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி அமர்ந்திருக்க, மற்றொரு இளைஞர் செல்போனில் படம் பிடித்தார். இது போன்ற பல முறை ஆபத்தை அறியாமல் விளையாட்டுத்தனமாக தடுப்பு சுவரில் அமர்ந்து செல்போனில் செல்பி எடுக்கின்றனர்.

ஏற்கனவே இது போன்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இளைஞர் ஒருவர் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி நின்று கடலில் குதித்தார். இதை உடனிருந்த நண்பர்களே செல்போனில் வீடியோ படம் எடுத்து வலைதளங்களில் அனுப்பினர். ஆகவே பாம்பன் ரோடு பாலத்தில் ஆபத்தான முறையில் செல்போனில் படம் பிடிப்பதை தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், எச்சரிக்கை பலகைகள் அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்