நல்லம்பள்ளி அருகே பேராசிரியரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

நல்லம்பள்ளி அருகே பேராசிரியரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-04 23:00 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சியில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ்துறையில் படித்து வரும் மாணவர் ஒருவரை, அந்த துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், அந்த மாணவரின் இட ஒதுக்கீடு குறித்து பேசி திட்டியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட தமிழ்துறை பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தமிழ்துறை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள், அந்த பேராசிரியரை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சமைய்சிங்மீனா தலைமையிலான போலீசார் கல்லூரிக்கு சென்றனர். பின்னர் போலீசார் மற்றும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாக்கியமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதையடுத்து நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர். மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்