அதிக பயணிகள் வருகை தர உள்ளதால் ரூ.17 லட்சத்தில் பழைய பஸ் நிலையம் சீரமைக்கும் பணி அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் பழைய பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.

Update: 2020-02-04 23:00 GMT
வேலூர்,

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் புதிய பஸ்நிலையத்தை சீரமைத்து பல்வேறு வசதிகள் கொண்ட பஸ் நிலையமாக மாற்ற ரூ.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதிய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி தற்காலிக பஸ் நிலையமாக செயல்பட உள்ளது. அங்கிருந்து சென்னை, திருப்பத்தூர், பெங்களூரு, குடியாத்தம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அடிப்படை வசதிகள்

மேலும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

எனவே பழைய பஸ் நிலையத்துக்கு அதிக அளவிலான பயணிகள் வர உள்ளனர். அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணியில் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், உதவி பொறியாளர் பழனி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பழைய பஸ் நிலையத்தில் காணப்பட்ட ராட்சத பள்ளங்கள் சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.

ரூ.17 லட்சத்தில்...

மேலும் அங்கு பயணிகளுக்கு, பயணிகள் நிற்கும் இடத்தின் மேற்கூரை, கழிவறை போன்றவை சீரமைக்கப்பட உள்ளது. கூடுதலாக கழிவறை, மின்விளக்கு, குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்