மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் விபத்து: கான்கிரீட் கலவை லாரி சக்கரத்தில் நசுங்கி 3 தொழிலாளர்கள் பலி

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காக இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் ஓய்வுக்காக சற்று நேரம் தூங்கிய போது, கான்கிரீட் கலவை லாரியின் சக்கரத்தில் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2020-02-07 00:30 GMT
மதுரை,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மதுரை மாநகரை நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் மதுரை வைகை ஆற்றின் கரையோரங்களை அழகுபடுத்தும் பணி மற்றும் சாலைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில நாட்களாக ஆழ்வார்புரம் வைகை ஆற்று ஓரத்தில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் வேலை நடைபெற்றது.

இதற்காக ஏராளமான தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

ஓய்வுக்காக தூங்கினர்

நேற்று முன்தினம் நள்ளிரவிலும் அங்கு பணிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொழிலாளர்களில் சிலர் அதிகாலை 4 மணி அளவில் ஓய்வெடுப்பதற்காக தற்காலிகமாக அமைத்த சாலையின் ஓரத்தில் படுத்து உறங்கினர். அவர்களின் அருகே கான்கிரீட் கலவை லோடுடன் லாரி நின்று கொண்டிருந்தது.

அதிகாலை 5 மணி அளவில் அந்த கலவை லாரியை அதன் டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் இயக்க முற்பட்டார். லாரி தாழ்வான பகுதியில் நின்றதாலும், அதிக எடை கொண்ட கான்கிரீட் கலவை ஏற்றப்பட்டு இருந்ததாலும் லாரி எதிர்பாராதவிதமாக பின்நோக்கி நகர்ந்துள்ளது. லாரியை கட்டுப்படுத்துவதற்குள் அந்த லாரியின் பின்பக்க சக்கரங்கள் அங்கு படுத்து தூங்கி கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் மீது ஏறி இறங்கின.

3 பேர் பலி

விபரீதத்தை உணர்ந்த டிரைவர் உடனே லாரியை நிறுத்தினார். இதற்கிடையே அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்தனர்.

லாரி நசுக்கிய 3 பேரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடே‌‌ஷ் (வயது 30) மற்றும் பெரியசாமி (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. கால்களை லாரி சக்கரம் நசுக்கியதால் சென்னையை சேர்ந்த பாபு(28) என்பவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனைதொடர்ந்து பாபுவை மீட்டு உடனடியாக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்கிடையே சிகிச்சையில் இருந்த பாபுவும் சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்ததால், பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

புதுக்கோட்டை டிரைவர் கைது

இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தல்லா குளம் போக்குவரத்து போலீசார், லாரி டிரைவர் ஆரோக்கியசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த விபத்து லாரி டிரைவரின் கவனக்குறைவால் நடந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவில் வேலை பார்த்து விட்டு சற்று நேரம் ஓய்வுவெடுக்க நினைத்து தூங்கிய 3 பேர், லாரி சக்கரத்தில் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்