அரசு பஸ் மீது லாரி மோதி 15 பேர் படுகாயம்

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி விலக்கில் அரசு பஸ் மீது லாரி மோதியதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-02-06 23:00 GMT
அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இருந்து அரசு பஸ்சை கள்ளிக்குடியை சேர்ந்த டிரைவர் கருபாண்டி (வயது48) ஓட்டிச்சென்றார். கண்டக்டராக உடையம்பட்டி திருப்பதி பணியாற்றினார். பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆத்திபட்டி விலக்கில் எதிரே வந்த மணல் லாரி அரசு பஸ் மீது திடீரென மோதியது.

இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. பஸ்சில் பயணம் செய்த பலர் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதில் திருச்சுழியை சேர்ந்த வேல்ராம் (68), நரிக்குடியை சேர்ந்த தங்கலட்சுமி(57), லிங்குசாமி(44), பிரதாப் (35), சிவக்குமார் (37), ப்ரியா (24), ஆதிலட்சுமி (64), மல்லிகா (48), முத்துபேச்சி (42), புன்னைவனம் (40), சிவராதா (26), நாகரத்தினம் (60) ஆகியோர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்