அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதே பா.ஜனதாவின் நோக்கம் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதே பா.ஜனதாவின் நோக்கம் என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டினார்.

Update: 2020-02-08 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்பபெற வலியுறுத்தியும் நடந்த கையெழுத்து இயக்க நிறைவு பொதுக்கூட்டம் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. தீர்த்தராமன் வரவேற்றார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், ராஜாராம் வர்மா, நிர்வாகிகள் சித்தையன், நாகராஜன், நகர தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செல்லகுமார் எம்.பி, செயல் தலைவர்கள் விஷ்ணுபிரசாத் எம்.பி., மோகன் குமாரமங்கலம், மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஹசன், தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை படப்பிடிப்பின் இடையில் வாகனத்தில் சென்னைக்கு அழைத்து சென்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரித்துறை வழக்கில் அவர் ரூ.66 லட்சம் அபராதம் செலுத்தினால் போதும். அவர் மீதான வழக்கில் மேல்முறையீடு செய்யப்படாது என்று வருமான வரித்துறையினர் கூறி உள்ளனர். இத்தகைய நடவடிக்கை ஏன் நடிகர் விஜய்க்கு பொருந்தவில்லை?. நடிகர் விஜய் 2 படங்களில் அரசுக்கு எதிராக பேசியதால் அவர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை பாய்கிறது. நடிகர் ரஜினிகாந்த் மீதும் மத்தியில் ஆள்பவர்களுக்கு கோபம் உள்ளது. அந்த கோபம் தீர குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்று அவர்கள் எழுதி கொடுத்த அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு பேசி இருக்கிறார். அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கை முடிவுக்கு வருகிறது. இதுதான் டீல்.

துணை நிற்போம்

நடிகர் ரஜினிகாந்த் பெரிய நடிகர். அவர் அறிக்கை விட்டால் மக்கள் அதை கவனிப்பார்கள் என்பதுதான் அதற்கு காரணம். நானும் ரஜினிகாந்த் ரசிகர்தான். எனக்கு இப்போது 68 வயது ஆகிவிட்டது. இதேபோல் ரஜினிகாந்த் ரசிகர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள். தற்போது நடிகர் விஜய்க்கு ஏராளமான இளைஞர்கள் கொண்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் தற்போது மத்தியில் ஆள்வோரின் கவனம் நடிகர் விஜய் மீது விழுந்து உள்ளது. நடிகர் விஜய் வெளியிடுவதற்காக கூட ஒரு அறிக்கை தயார் செய்யப்படலாம். அவரும் விழுந்து விடுவாரா? அல்லது துணிந்து நிற்பாரா? என்பது அவருடைய கையில்தான் உள்ளது. நடிகர் விஜய் இந்த சோதனையை துணிச்சலுடன் எதிர்கொண்டு நின்றால் நாம் அனைவரும் அவருக்கு துணையாக நிற்போம்.

குடியுரிமை பதிவேடு தொடர்பான முடிவை பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய 2 பேர் மட்டுமே எடுத்து உள்ளனர். இந்திய நிலப்பரப்பில் வாழும் அனைவரும் இந்தியர்களே என்று அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் எழுதியுள்ளார். இந்த கருத்தை சிதைத்து அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதே பா.ஜனதாவின் நோக்கம். இதை எதிர்த்து ஜனநாயக சக்திகள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்