கெடிலம் ஆற்றில் மணல் கடத்தல்: மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் - நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு

நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் மணல் கடத்த வந்தவர்களின் மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-09 23:00 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த வானமாதேவி பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆற்றுக்கு செல்லும் வழியில் வாகனங்கள் செல்லாத வகையில் பள்ளம் தோண்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வானமாதேவி கெடிலம் ஆற்றுப்பகுதியில் மர்மநபர்கள் 10-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் கடத்துவதற்காக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாட்டு வண்டி டயர்களின் காற்றையும் அவர்கள் பிடுங்கி விட்டனர்.

இதையடுத்து மணல் கடத்த வந்தவர்கள், மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு மாடுகளுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை அங்கிருந்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்த முயன்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்