சரபோஜி மார்க்கெட் கடைகளை காலி செய்வதற்காக வந்த அதிகாரிகள் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

நிர்ணயிக்கப்பட்ட கெடு முடிந்தும் அப்புறப்படுத்தாததால் சரபோஜி மார்க்கெட் கடைகளை காலி செய்வதற்காக அதிகாரிகள் வந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-09 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் ரூ.904 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பூங்கா சீரமைப்பு, சாலை வசதி, மணிக்கூண்டு சீரமைப்பு, குப்பைக்கிடங்கு சீரமைப்பு, பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்கள் நிற்கும் பஸ் நிலையம் உள்ளிட்டவை புதுப்பொலிவு பெறுகிறது. மேலும் அகழி சுத்தப்படுத்தப்பட்டு படகு விடவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், தஞ்சை காமராஜ் மார்க்கெட், கீழவாசலில் உள்ள சரபோஜி மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிதாக ரூ.32 கோடியில் கட்டிடங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சரபோஜி மார்க்கெட்

எனவே, இந்த 2 மார்க்கெட்டுகளிலும் உள்ள கடைகளை காலி செய்யுமாறு 7 மாதங்களுக்கு முன்பு வணிகர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து வியாபாரிகள் கால அவகாசம் கோரி வந்தனர். இதில், காமராஜர் மார்க்கெட்டுக்கு மாற்று இடமாக புதுக்கோட்டை சாலை எஸ்.பி.சி.ஏ. மைதானத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. ஆனால், சரபோஜி மார்க்கெட் வணிகர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மாற்று இடம் வழங்கப்படாததால், அவர்களால் உடனடியாக காலி செய்ய முடியவில்லை. மேலும் இது தொடர்பாக வியாபாரிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சிக்கு சார்பாக தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து 13-1-2020-ந்தேதிக்குள் கடைகளை காலி செய்து மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகை மற்றும் தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா ஆகியவை நடைபெற்றதால் வியாபாரிகள் கடந்த 6-ந்தேதி வரை அவகாசம் கேட்டனர்.

அப்புறப்படுத்த வந்த அதிகாரிகள்

இந்த நிலையில் இந்த மார்க்கெட்டில் உள்ள 354 கடைகளில் 27 கடைகளை சேர்ந்த வணிகர்கள் காலி செய்து கடைகளை மாநகராட்சியிடம் ஒப்படைத்து விட்டனர். மற்ற வணிகர்கள் தொடர்ந்து கடையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 6-ந்தேதி அவகாசம் முடிந்தும் காலி செய்யப்படாததால் கடைகளை உடனடியாக காலி செய்யாவிட்டால் 9-ந்தேதி காலை கடைகளில் போடப்பட்டுள்ள பூட்டுகளை உடைத்து காலி செய்யப்படும் என வணிகர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தினர். இது தொடர்பாக நோட்டீசும் கடைகளின் முன்பு ஒட்டப்பட்டன.

அதன்படி நேற்று காலை 7 மணி அளவில் மாநகராட்சி வருவாய் அலுவலர் பிரகா‌‌ஷ் தலைமையில் உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி வருவாய் அலுவலர் சங்கரவடிவேல், வருவாய் ஆய்வாளர்கள் திருமுருகன், வாசுதேவன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன், உதவி பொறியாளர் ரமே‌‌ஷ், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித்குமார் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் 100 பேர் அங்கு வந்தனர்.

வியாபாரிகள் அவகாசம்

மேலும் தாசில்தார் வெங்கடேசன் அங்கு வந்தார். நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்ததும் கடைகளின் உரிமையாளர்களும் வந்தனர். அவர்கள் அதிகாரிகளிடம் காமராஜ் மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே கடைகளை காலி செய்ய 2 நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கூறினர்.

அதற்குள் அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படியே நாங்கள் அகற்றுகிறோம். கடைகளை அகற்றக்கோரி 3 முறை நோட்டீசும் கொடுத்துவிட்டோம். உங்கள் பொருட்களை எடுத்துச்செல்வதற்கு நாங்கள் எந்தவித இடையூறும் செய்யவில்லை. வியாபாரிகள் பொருட்களை எடுத்துச்செல்ல நாங்கள் அனுமதிக்கிறோம் என தெரிவித்தனர். பின்னர் மார்க்கெட் பகுதியில் உள்ள மின் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

காலி செய்தனர்

அதன் பின்னர் வணிகர்கள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை அவர்களே அப்புறப்படுத்த தொடங்கினர். கடைகளில் இருந்த பொருட்களை லாரி மற்றும் சரக்கு ஆட்டோக்களை கொண்டு வந்து அதில் ஏற்றி வெளி இடங்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வணிகர்கள் காலி செய்த பிறகு மார்க்கெட்டை சுற்றிலும் இரும்பு வேலிகள் அமைக்கப்படும். அதன் பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்படும்’’என்றனர்.

மேலும் செய்திகள்