லண்டனில் செயல்படும் கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி

லண்டனில் செயல்படும் கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்தவர் மீது திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

Update: 2020-02-10 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (வயது 29), திண்டுக்கல்லை அடுத்த சித்தையன்கோட்டையை சேர்ந்த பரக்கத்துல்லா (29), கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டையை சேர்ந்த ஜாக்சன் (26), அருண் (26), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பூபேஷ் (24) ஆகியோர் டிப்ளமோ படித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வேலை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நண்பர்கள் மூலம் சித்தையன்கோட்டையை சேர்ந்த ஒருவர், அவர்களுக்கு அறிமுகம் ஆனார். அப்போது லண்டனில் செயல்படும் கப்பல் நிறுவனத்துக்கு கட்டுமானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. எனவே, அந்த நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். மேலும் பணம் கொடுத்தால் அந்த நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக, அவர் தெரிவித்தார்.

அதை உண்மை என நம்பி ஜாக்சன், அருண் ஆகியோர் தலா ரூ.6 லட்சமும், பூபேஷ் ரூ.7 லட்சமும், ஜெயப்பிரகாஷ் ரூ.4 லட்சத்து 70 ஆயிரமும், பரக்கத்துல்லா ரூ.4 லட்சத்து 35 ஆயிரமும் அந்த நபரிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் பணி நியமன ஆணையை மின்னஞ்சலில், அவர் அனுப்பினார். ஆனால், அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த 5 பேரும் பணத்தை திரும்ப கேட்டு சென்றனர். ஆனால், பணத்தை திரும்ப கொடுக்காமல் அந்த நபர் தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து பணத்தை மீட்டுதரும்படியும், மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் 5 பேரும் குடும்பத்தினருடன் வந்து, திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் புகார் அளித்தனர். 

மேலும் செய்திகள்