பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீசாரின் குடும்பத்தினருக்கு டி.ஐ.ஜி. நேரில் ஆறுதல்

பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீசாரின் குடும்பத்தினருக்கு டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா நேரில் ஆறுதல் கூறினார்.

Update: 2020-02-11 00:21 GMT
அழகியமண்டபம்,

காஷ்மீரில் 2009-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கருங்கல், பாத்திரவிளையை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் பிரதாப்சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல், காஷ்மீரில் 2010-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரணியல் பள்ளிச்சன்விளையை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மோகன்லால், 2013-ம் ஆண்டு சட்டிஸ்கரில் மாவேயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் கம்பிளாரை சேர்ந்த கிளைமண்ட் ஜோசப் ஆகியோரும் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தினரை மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆவடி படைபிரிவின் டி.ஐ.ஜி. சோனல் மிஸ்ரா நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குறைகளை கேட்டறிந்தார்

அப்போது, அவர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கிடைத்த பண பலன்கள், ஓய்வூதியம் போன்றவற்றை விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். அவருடன் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு விக்னேஷ், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா ஹரி, கல்குளம் தாசில்தார் ராஜா சிங், இரணியல் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தநிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் போலீசார் சிலர் டி.ஐ.ஜி.யை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீசார் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் கேண்டீன் திறக்க வேண்டும். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மத்திய ரிசர்வ் போலீசாருக்கும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்