சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

ஆண்டிப்பட்டியில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-02-11 23:00 GMT
தேனி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பூக்காரத்தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரைவீரன் (வயது 38). பூ கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஊரில் உள்ள மறைவான இடத்துக்கு கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். பின்னர் அவளுடைய பெற்றோர் தரப்பில் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அந்த புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 366 (கடத்திச் செல்லுதல்) மற்றும் போக்சோ சட்டம் ஆகிய இரு சட்டப்பிரிவுகளில் மதுரைவீரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் மதுரைவீரனுக்கு, சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து மதுரைவீரனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்