அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-02-11 22:45 GMT
செங்கம்,

செங்கம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் குடிநீர், துப்புரவு பணி, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் செங்கம் 15-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் தங்கள் பகுதியில் செய்து தரவில்லை எனக்கூறி செங்கம் பேரூராட்சி அலுவலர்களிடம் புகார் கூறினர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்காததால் ஆத்திரமடைந்த திருவள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கால்வாய் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. குடிநீர் வசதி செய்து தராததால் குடிதண்ணீருக்காக மிகுந்த அவதிப்படுகிறோம். குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக துப்புரவு பணிகள் சரிவர நடப்பதில்லை. கொசுத் தொல்லையால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவ்வப்போது காய்ச்சல் வருகிறது.

மேலும் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பேரூராட்சி அலுவலர்களிடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செயல்அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் தலைமை எழுத்தர் பிரதாபன் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து செயல் அலுவலரிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்