உத்தனப்பள்ளி அருகே இரட்டை கொலை வழக்கில் வக்கீல் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

உத்தனப்பள்ளி அருகே இரட்டை கொலை வழக்கில் வக்கீல் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2020-02-11 22:45 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. தொழில் அதிபர். இவருடைய மனைவி நீலிம்மா (வயது 42). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், உத்தனப்பள்ளி அருகே உள்ள கம்பெனியில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை கெலமங்கலம் அடுத்த எச்.செட்டிப்பள்ளியை சேர்ந்த டிரைவர் முரளி (25) என்பவர் ஓட்டி சென்றார். ராயக்கோட்டை சாலையில் உள்ள சானமாவு அருகே வரும்போது, லாரியை அந்த கார் மீது மோத விட்டு, விபத்து போல் ஏற்படுத்தியும்,. மேலும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் நீலிம்மா மற்றும் கார் டிரைவர் முரளி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆனந்த்பாபுவின் அக்கா கணவரான தொழில் அதிபர் ராமமூர்த்தி, தொழில் போட்டி காரணமாக, மதுரையை சேர்ந்த கூலிப்படை உதவியுடன், ஆனந்த்பாபு மற்றும் நீலிம்மாவை, கொலை செய்ய முயற்சி செய்ததும், ஆனந்த்பாபு கம்பெனியில் இருந்ததால், அவரது மனைவி நீலிம்மா மற்றும் டிரைவர் முரளி பலியானதும் தெரிய வந்தது.

இந்த இரட்டை கொலை தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் குற்றவாளியான ராமமூர்த்தி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இதனிடையே கொலை வழக்கில் கைதான மஞ்சுநாத், ஆனந்த், ராமு, கோபால் ஆகிய நான்கு பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள மதுரை காளிமுத்து நகரை சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன், (36), கருப்பாயூரணியை சேர்ந்த அசோக் (40), மேல் பொன்நகரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (29), சூளகிரியை அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த முருகன் (51) ஆகிய 4 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரபாகருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சேலம் சிறையில் உள்ள வக்கீல் உள்பட 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்