அறுவடை எந்திரம் கிடைக்காததால் நெல்லின் தன்மை மாறி குறைந்த விலைக்கு விற்பனை விவசாயிகள் வேதனை

அறுவடை எந்திரம் கிடைக்காமல் நெல்லின் தன்மை மாறி வழக்கத்தை விட குறைந்த விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2020-02-11 23:13 GMT
பாகூர்,

புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறுவடை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பருவத்தில் குறிப்பாக வெள்ளைப் பொன்னி ரகமும், அமெரிக்கன் பொன்னி என்னும் டி.பி.டி. ரகங்களும் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.

இதற்கான மகசூல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் குறைவு. அதாவது ஏக்கருக்கு 40 மூட்டை நெல்லுக்குப் பதிலாக 30 மூட்டை மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக நெல் அறுவடைக்கு எந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக பகுதியிலிருந்து நெல் அறுவடை எந்திரங்கள் பெருமளவு வரவில்லை. குறைவான வண்டிகளே வந்துள்ளன. இதனால் விளைந்த நெல் கதிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நிலத்திலேயே சரிந்து கிடக்கின்றன. தாமதமாக அறுவடை செய்வதால் நெல்லின் தன்மை மாறி தரம் குறைந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட குறைந்த விலைக்கே நெல் மூட்டைகள் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்