குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: இரும்புக் கம்பியால் அடித்து என்ஜினீயர் கொலை தாய், தந்தை கைது

புதுவையில் குடிபோதையில் தகராறு செய்த என்ஜினீயரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்ததாக தந்தை, தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-11 23:18 GMT
அரியாங்குப்பம்,

புதுவை வீராம்பட்டினம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார் (வயது70). மீன் வியாபாரி. இவருடைய மனைவி அன்னக்கொடி (65). இவர்களுக்கு ரஞ்சித் (40), செந்தில் ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

இதில் ரஞ்சித் பி.டெக் பட்டதாரி ஆவார். பிரான்ஸ் நாட்டில் என்ஜினீயராக பணியாற்றிய அவர் மனைவி அனிதாவுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் பிரான்சில் இருந்து ரஞ்சித் மட்டும் வீராம்பட்டினத்திற்கு வந்தார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரஞ்சித் பணம் கேட்டு பெற்றோருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ரஞ்சித், தூங்கிக்கொண்டிருந்த தனது தாயாரை எழுப்பி குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், தாயார் அன்னக்கொடியை தாக்கினார். இதனால் வலி தாங்கமுடியாமல் அவர் அலறினார். சத்தம்கேட்டு வீட்டின் மற்றொரு அறையில் இருந்த குமார் ஓடிவந்து மகன் ரஞ்சித்தை கண்டித்தார். வாக்குவாதம் செய்த அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த குமார் அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து ரஞ்சித்தின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சுருண்டு விழுந்தார். அதன்பிறகும் ஆத்திரம் தீராமல் ரஞ்சித்தின் கை, கால்களை புடவையால் கட்டிப் போட்டு மீண்டும் இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தெரியவந்ததும் தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித்தின் தந்தை குமார் கைது செய்யப்பட்டார். தாயார் அன்னக்கொடியையும் போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு செய்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் தந்தையே இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்