பெங்களூரு மாநகராட்சியில் கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவி ஆனார், மமதா வாசுதேவ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு

பெங்களூரு மாநகராட்சியில் கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவியாக போட்டியின்றி ஒரு மனதாக மமதா வாசுதேவ் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2020-02-12 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சியில் 12 நிலைக்குழுக்கள் உள்ளன. பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆண்டு நிலைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் தொடர்ந்து தள்ளிபோனது.

கடந்த மாதம் (ஜனவரி) நிதி, மார்க்கெட், கல்வி உள்பட 10 நிலைக்குழுக்களுக்கான தேர்தல் நடந்ததோடு, அந்த நிலைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள், தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டன. தோட்டக்கலை மற்றும் கணக்கு தணிக்கை நிலைக்குழுக்களுக்கு மட்டும் 10 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதனால் 2 நிலைக்குழுக்களுக்கும் தலா ஒரு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது.

மமதா வாசுதேவ் போட்டியின்றி தேர்வு

அதன்பிறகு கணக்கு தணிக்கை குழுவுக்கு பெங்களூரு ஜே.பி. பூங்கா வார்டு கவுன்சிலர் மமதா வாசுதேவ், தோட்டக்கலை நிலைக்குழுவுக்கு ராஜாஜிநகர் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று கணக்கு தணிக்கை குழுவுக்கு தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.

மேயர் கவுதம் குமார் தலைமையில் பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த தேர்தலில் ஜே.பி. பூங்கா வார்டு கவுன்சிலர் மமதா வாசுதேவ் கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவியாக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மேயர் கவுதம் குமார் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்