வேதாரண்யம் அருகே, கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 620 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது; 2 கார்கள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 620 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு லாரி, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-02-13 23:00 GMT
வாய்மேடு, 

நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பிடிபடுவது அதிகரித்து வந்தது. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கோடியக்கரைக்கு ஒரு கண்டெய்னர் லாரியில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வரப்படுவதாக தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார், ேவதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். இதில் அந்த லாரியில் 310 பொட்டலங்களில் 620 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து லாரியையும், அதில் இருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

லாரியில் வந்தவர்களிடம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாரி டிரைவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணன்(வயது 40) என்பதும், அதில் வந்தவர்கள் அதே ஊரை சேர்ந்த கிளீனர் தவமணி(34), கோடியக்கரையை சேர்ந்த பரமானந்தம்(35), வேதாரண்யத்தை சேர்ந்த செல்வராஜ்(54), கோடியக்காட்டை சேர்ந்த அய்யப்பன்(35) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமணன், தவமணி, பரமானந்தம், செல்வராஜ், அய்யப்பன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்த லாரிக்கு வழிகாட்டுவதற்காக 2 கார்களில் சிலர் வந்துள்ளனர். அவர்கள் போலீசாரை கண்டதும் கார்களை நிறுத்தி விட்டு மாயமாகி விட்டனர். இந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்த கார்களில் வந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கஞ்சா எந்தெந்த பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றி கைதானவர்களிடம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்