சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்திவந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-02-13 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (வயது 21), சையத் லப்பை(42), புதுக்கோட்டையைச் சேர்ந்த அஜ்மல் கான்(18) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

1 கிலோ தங்கம் பறிமுதல்

அதிகாரிகளிடம் முன்னுக் குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 3 பேரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 67 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை யாருக்காக கடத்தி வந்தனர்? இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என பிடிபட்ட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்