டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி: பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Update: 2020-02-13 22:45 GMT
பெங்களூரு,

டெல்லி தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வெற்றி பெற முடியவில்லை

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால், மதம், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மேற்கொண்ட பிரசாரம், அவர்களது கட்சி கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரசாரம் செய்தும், அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை.

காங்கிரசின் தோல்வி குறித்து நாங்கள் எங்கள் கட்சியின் செயற்குழுவில் சுயபரிசோதனை செய்வோம். தவறு எங்கு நடந்தது என்பது குறித்தும் நாங்கள் ஆராய்வோம். சில நேரங்களில் வளர்ச்சி அரசியல் எடுபடுகிறது. வேறு சில நேரங்களில் உணர்வு பூர்வமான விஷயங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள். நான் 55 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். 48 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கிறேன்.

என்னை அங்கீகரிக்கவில்லை

எனது தொகுதியான கலபுரகியில் எந்த ஊழல் கறை படியாமல் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டேன். இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னை அங்கீகரிக்கவில்லை. அந்த தொகுதியில் எதையுமே செய்யாத பா.ஜனதா வேட்பாளருக்கு மக்கள் வாக்களித்தனர். கர்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவர் விரைவில் நியமனம் செய்யப்படுவார்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மேலும் செய்திகள்