ஏரியில் தண்ணீர் எடுத்து விற்பதை தடுக்கக்கோரி ஓய்வுபெற்ற தாசில்தார் உண்ணாவிரதம்

ஏரியில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை தடுக்கக்கோரி ஓய்வுபெற்ற தாசில்தார் தனி ஒருநபராக உண்ணாவிரதம் இருந்தார்.

Update: 2020-02-14 00:51 GMT
பாகூர்,

பாகூர் அருகே சோரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஓய்வுபெற்ற தாசில்தார். இவர், குருவிநத்தம் தாங்கல் ஏரியில் தனிநபர் ஒருவர் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதாக தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார். ஆனால் அதுபற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏரியில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை தடுக்கக்கோரி தனிஒரு நபராக நேற்று காலை பாகூர் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ராமலிங்கம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

தகவல் அறிந்த பாகூர் போலீசார் விரைந்து வந்து, அனுமதியின்றி உண்ணாவிரதம் இருப்பதாக கூறி ராமலிங்கத்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி, அனுப்பிவைத்தனர்.

பொதுநலன் கருதி அளித்த புகார் மனு மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஓய்வுபெற்ற அதிகாரியே உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பாகூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்