காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் இந்து எழுச்சி முன்னணி நூதன போராட்டம்

காதலர் தினத்துக்கு சில இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Update: 2020-02-14 22:00 GMT
தேனி,

தேனியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து எழுச்சி முன்னணியினர் கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்து நூதன போராட்டத்தை நடத்தினர்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு 

காதலர் தினத்துக்கு சில இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று காதலர் தினத்தை காதலர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடிய நிலையில், தேனி அல்லிநகரத்தில் இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போராட்டத்தை நடத்தினர்.

இதற்காக அவர்கள் ஒரு கழுதைக்கும், ஒரு நாய்க்கும் மாலை அணிவித்து சாலையோரம் உள்ள சிவன் கோவில் முன்பு அழைத்து வந்தனர். கழுதையை மணமகளாகவும், நாயை மணமகனாகவும் சித்தரித்தனர். பின்னர், அவை இரண்டுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

கோ‌ஷங்கள் 

அதைத்தொடர்ந்து அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நூதன போராட்டம் குறித்து நிர்வாகிகள் கூறுகையில், ‘காதலர் தினம் என்ற பெயரில் சிலர் காதலர் தினத்தில் பொது இடங்களில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். காதல் என்ற போர்வையில் கலாசாரத்தை சீரழிக்கின்றனர். பொது இடங்களில் எல்லை மீறலில் ஈடுபடுகின்றனர். இதை கண்டிக்கும் விதமாக நூதன திருமணம் செய்து வைத்துள்ளோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்