வருகிற சட்டமன்ற தேர்தலில், தீவிர களப்பணியாற்றி தி.மு.க. தலைவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வருகிற சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக களப்பணியாற்றி தி.மு.க. தலைவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2020-02-14 23:00 GMT
நெய்வேலி,

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலி தொ.மு.ச. அரங்கில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ. சபா. ராஜேந்திரன், இளைஞரணி மாநில தலைவர் அன்பில் மகே‌‌ஷ்பொய்யாமொழி, இளைஞரணி மாநில துணை அமைப்பாளர் சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தி.மு.க. இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். அப்போது தி.மு.க. தலைவரிடம் 3 மாதங்களில் 30 லட்சம் பேரை இளைஞரணியில் சேர்த்து காட்டுவதாக உறுதி அளித்திருந்தேன். நமது கட்சியில் மகளிரணி, மாணவரணி, மீனவரணி, வழக்கறிஞரணி உள்பட பல்வேறு அமைப்புகள் இருந்தாலும், இளைஞர் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நான் கருதுகிறேன். நான் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அனைத்து மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோரை அழைத்து ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 10 ஆயிரம் உறுப்பினர்களை இளைஞரணியில் சேர்க்க வேண்டுமென்று இலக்கை நிர்ணயித்து, பணியாற்றி வருகிறோம். தற்போது 80 சதவீத இலக்கை பெற்றிருக்கிறோம்.

கடலூர் மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை 4 சட்டமன்ற தொகுதிகளில் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதுவரை 24 ஆயிரத்து 854 உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க பயந்து தான் தி.மு.க. நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுப்பதாக சிலர் கூறினார்கள். உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் தி.மு.க. நீதிமன்றம் சென்றது. மக்கள் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நமக்கு அளித்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தீவிரமாக களப்பணியாற்றி தி.மு.க. தலைவரை முதல்-அமைச்சராக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் புதிய உறுப்பினர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முன்னதாக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தொ.மு.ச. தலைவர் வீரராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி, பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர நிர்வாகிகள், தொ.மு.ச. துணைத்தலைவர்கள், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்