தாயின் நிலத்தை மீட்டுத்தர கோரி சாலையில் அமர்ந்து பெண் திடீர் தர்ணா - போக்குவரத்து பாதிப்பு

தாயின் நிலத்தை மீட்டுத்தர கோரி சாலையில் அமர்ந்து பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-02-14 22:30 GMT
தஞ்சாவூர்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி கல்யாணி(வயது33). பார்வை குறைபாடு உள்ள இவர் தஞ்சை காந்திஜிசாலையில் உள்ள புதுஆற்றுப்பாலம் அருகே சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கல்யாணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையோரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், எனது தாய் அமராவதியின் வீடு தஞ்சை அண்ணாநகரில் உள்ளது. நான் குடும்பத்துடன் ராசிபுரத்தில் வசித்து வருகிறேன். என் தாய்க்கு கண் சரிவர தெரியாது. அவரை பராமரிப்பதற்காக வந்தேன். அவருக்கு சொந்தமான 640 சதுரஅடி நிலத்தை உறவினர்கள் அபகரித்து கொண்டு, தாயை அடித்து உதைக்கின்றனர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட என்னையும் அடித்துவிட்டனர்.

இது குறித்து அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். என் தாயாருக்கு சேர வேண்டிய நிலத்தை உறவினர்களிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும். என்னையும், தாயையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

பின்னர் மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் கல்யாணியை ஒரு ஆட்டோவில் ஏற்றி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்