கலபுரகியில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர், டாக்டர் ஆனார்

கலபுரகியில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்தவர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகி டாக்டர் படிப்பை முடித்துள்ளார்.

Update: 2020-02-15 22:15 GMT
பெங்களூரு,

கலபுரகி மாவட்டம் அப்சல் புராவை சேர்ந்தவர் சுபாஷ் பட்டீல் (வயது 40). இவர் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். 3 ஆண்டுகள் படிப்பை முடித்த நிலையில் கொலை வழக்கில் சுபாஷ் பட்டீல் சிக்கினார். இந்த சம்பவம் கடந்த 2002-ம் ஆண்டு நடந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் சுபாஷ் பட்டீலை கைது செய்தனர். இதனால் அவருடைய படிப்பு பாதிக்கப்பட்டது. மேலும் சுபாஷ் பட்டீல் தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதையடுத்து அவர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள மருத்துவமனையில் அவர் பணி செய்து வந்தார். அதன்பிறகு கடந்த 2016-ம் ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் தனது எம்.பி.பி.எஸ். படிப்பை தொடர்ந்தார். டாக்டர் படிப்பின் ஒருபகுதியான பயிற்சியையும் அவர் தற்போது முடித்துள்ளார். இதன்மூலம் அவர் டாக்டராக உருவெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எம்.பி.பி.எஸ். படிப்பை 3-ம் ஆண்டு படித்தபோது கொலை வழக்கில் சிக்கினேன். ஆயுள் தண்டனை பெற்ற பிறகு 2016-ம் ஆண்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகி டாக்டர் படிப்பை முழுவதுமாக முடித்துள்ளேன். எனது சிறுவயது கனவு 40 வயதில் நனவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

மேலும் செய்திகள்