ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மூவரைவென்றான் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை காரணமாக தனது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றபோது போலீசார் தடுத்து அழைத்து சென்றனர்.

Update: 2020-02-17 22:45 GMT
விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மூவரைவென்றான் கிராமத்தில் நடந்துமுடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேஷ்கண்ணா என்பவர் வெற்றிபெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட முருகானந்தம் தோல்வி அடைந்தார். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு அந்த கிராமத்தை சேர்ந்த கொத்தாளமுத்து என்பவரது மனைவி மகாலெட்சுமி என்பவர் தனது குழந்தைகள் சத்தியகுமார் (வயது16), மகள் அனுராதா (14) மற்றும் உறவினர்கள் பாண்டி செல்வி, சுப்புலட்சுமி ஆகியோருடன் வந்தார். மகாெலட்சுமியின் குடும்பத்தினர் தேர்தலின்போது ராஜேஷ்கண்ணாவுக்கு ஆதரவாக வேலை செய்ததால் தோல்விஅடைந்த முருகானந்தத்திற்கும் மகாெலட்சுமி குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும் முருகானந்தத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகாெலட்சுமி தனது குழந்தைகள், உறவினர்கள் முன்னிலையில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் பிரச்சினை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்