இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு

ஏழ்மை நிலையில் உள்ள இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2020-02-17 22:01 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 397 மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் பையர்நத்தம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இருளர் இனமக்கள் கலந்து கொண்டு ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் இருளர் இனத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக இடம் இல்லை. எனவே எங்கள் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

புட்டிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரியாக நடைபெறவில்லை. எனவே குடிநீர் வினியோகிக்கும் பணியை முறையாக மேற்கொள்ள உரிய பணியாளரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மல்லுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள திம்மராயனஅள்ளி, புங்கன் ஏரிகளுக்கு கண்டகபைல் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இதன் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.

இந்த பகுதியில் உள்ள ஓடையில் இருந்த 2 தடுப்பணைகளை சிலர் உடைத்து விட்டனர். இதுதொடர்பாக தட்டி கேட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்த பகுதியில் புதிய தடுப்பணையை கட்டவிடாமல் தடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்