பழனியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு-எதிர்ப்பு போராட்டத்தால் பதற்றம் - செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது தாக்குதல்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடந்தது. செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை தாக்கியதால் பழனியில் பதற்றம் ஏற்பட்டது.

Update: 2020-02-18 22:15 GMT
பழனி,

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பழனி கடைவீதியில் உள்ள சின்ன பள்ளிவாசல் வளாகத்தில் கடந்த 2 நாட்களாக முஸ்லிம்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தநிலையில் பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு பா.ஜ.க.வினர் திரண்டு வந்து, சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும், நாட்டின் அமைதியை சீர்குலைப்பதாக எதிர்க் கட்சிகள் மீது குற்றம்சாட்டி கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் ஹரிகரமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து சிவசேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் அங்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

திடீர் போராட்டத்தின் எதிரொலியாக, அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அதனை வாலிபர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அவர் யார்? என்று தெரியாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். செல்போனில் வீடியோ எடுத்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இந்து அமைப் பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்கிடையே பழனி பகுதியில் போராட்டத்தை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு போலீஸ் அதிகாரி ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மேலும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்டால், தாங்களும் நாளை (இன்று) முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்து அமைப்பினர் கூறினர்.

இதற்கு போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க மாட்டோம் என்றும், அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

அதன்பேரில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட் டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் பழனி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்