அடையாள அட்டை வழங்கக்கோரி அரசு மருத்துவமனையை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம்

அடையாள அட்டை வழங்கக்கோரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-02-19 08:53 GMT
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது
அடையாள அட்டை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசின் சலுகைகள், நலத்திட்ட உதவிகள் பெற அடையாள அட்டை மற்றும் ஊனச்சான்றிதழ் கேட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெறுவதற்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

முற்றுகை
இவ்வாறு அடையாள அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அடையாள அட்டை பெற மாவட்டம் முழுவதிலும் இருந்து மருத்துவமனைக்கு வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கலெக்டரிடம் கோரிக்கை மனு
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர், உடனடியாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்