இளம் வயது திருமணம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்: கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேச்சு

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் இளம் வயது திருமணம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கலெக்டர் பிரபாகர் கூறினார்.

Update: 2020-02-20 09:03 GMT
கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசிய போது எடுத்த படம்.
ஆய்வு கூட்டம்
கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் குறித்த அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தகுதியுள்ள தாய்மார்களுக்கு சென்றடையவும், துணை சுகாதார நிலைய வாரியாக பயனாளிகளுக்கு சென்ற உதவித்தொகை விவரத்தினை பதிவேட்டில் பராமரிக்க உரிய ஏற்பாடுகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இளம் வயது திருமணம்
இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கர்ப்பிணிகளுக்கு சேர வேண்டிய நிதியுதவியினை உரிய மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட பயனாளிகளை நேரில் சென்று சந்தித்து, அவர்களது வங்கி கணக்கு புத்தகத்தை தயார் நிலையில் வைத்துக்கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் சிசு மரணம் நிகழாத வண்ணம், சிக்கலில் உள்ள தாய்மார்களை கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து தாய், சேய் மரணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். இளம்வயது திருமணம் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அறிக்கை
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்களை சுற்றுப்புற தூய்மையாக வைத்து, அதன் விவரம் அடங்கிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை மாவட்ட நிர்வாகத்திற்கு மருத்துவ அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட அளவில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்கள், 2-ம் நிலை அலுவலர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்