ஏ.டி.எம். மையத்தில், விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் அபேஸ் - உதவி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய வாலிபர் கைது

ஏ.டி.எம். மையத்தில் விவசாயிக்கு உதவுவது போல் நடித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-20 22:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள கருங்காலிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 48), விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார்.

அங்கு இவருக்கு பணம் எடுக்க உதவி செய்ய முன்வந்த வாலிபர் ஒருவர், சக்கரவர்த்தியின் ஏ.டி.எம். அட்டையை பெற்று அதனை எந்திரத்தில் சொருகினார். பின்னர் 4 இலக்க ரகசிய எண்ணை அழுத்தினார். அடுத்த சில நொடிகளில் அந்த ஏ.டி.எம். அட்டையை வெளியே எடுத்து பணம் வரவில்லை என்று கூறி சக்கரவர்த்தியிடம் கொடுத்தார்.

அதன் பின்னர் சக்கரவர்த்தி அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியே சென்றதும் அடுத்த நொடியில் அவரது கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை அந்த வாலிபர் எடுத்து அபேஸ் செய்தார். சற்று நேரத்தில் சக்கரவர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் சக்கரவர்த்திக்கு பணம் எடுத்து தருவதற்கு உதவுவதுபோல் நடித்த அந்த வாலிபர், சக்கரவர்த்தி சென்றதும் அவரது கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கலையநல்லூரை சேர்ந்த வீரன் மகன் வீராசாமி (25) என்பது தெரியவந்தது. நேற்று காலை தியாகதுருகத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற வீராசாமியை போலீசார் கைது செய்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்