கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகள் தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக மாற்றுத்திறனாளிகள் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-20 23:30 GMT
தஞ்சாவூர்,

குடிசை மாற்று வாரியத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பை வழங்காததை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று சங்க மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. நீங்கள் வேண்டுமானால் அதிகாரிகளை சந்தித்து மனு அளியுங்கள் என போலீசார், மாற்றுத்திறனாளிகளிடம் தெரிவித்தனர்.

10 நாளில் நடவடிக்கை

இதையடுத்து வெற்றிவேல் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சியை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், இது குறித்து 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து மாவட்ட செயலாளர் வெற்றிவேல் கூறுகையில், ‘‘அதிகாரி தெரிவித்த தகவலின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம். 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்