குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணியினர் போராட்டம்

திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-20 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நேற்று இரவு, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் திடீரென திரண்டனர். பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வினோத்ராஜ் முன்னிலை வகித்தார். மேலும் மதுரை கோட்ட செயலாளர் சங்கர்கணேஷ், பா.ஜனதா மாவட்ட தலைவர் தனபாலன் உள்பட இந்து முன்னணி மற்றும் பா.ஜனதாவினர் பலர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தின் போது குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கோஷமிட்டனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யும்படி வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் போராட்டத்தை கைவிடும்படி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி விட்டதால் பேகம்பூரில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்