பல்லடம் காமராஜர் நகரில், குடிநீரில் எலிவால் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

பல்லடம் காமராஜர் நகரில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் எலிவால் மிதந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2020-02-20 22:30 GMT
பல்லடம், 

பல்லடம் நகராட்சி 9-வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அத்திக்கடவு குடிநீர் வீட்டுகுழாய் இணைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை குடங்களில் பிடித்த னர். அப்போது குடிநீரில் எலியின் சிதைந்த பாகங்கள் அழுகிய நிலையில் வந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அந்தபகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியம் பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசனிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆணையாளரின் உத்தரவின் பேரில் பணி மேற்பார்வையாளர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாய்களை தோண்டி ஆய்வு மேற்கொண்டார்.

இது பற்றி நகராட்சி ஆணையாளர் கணேசன் கூறியதாவது:-

பல்லடம் நகரில் அனைத்து பகுதிகளுக்கும் சுகாதாரமான தூய்மையான குடிநீரை வினியோகம் செய்து வருகிறோம். வீட்டுகுழாய் இணைப்பிலும், பொதுக்குழாய் இணைப்பிலும் எலி உள்ளே செல்ல வழியில்லை.

குழாயில் தண்ணீர் பிடித்தபின்பாவது குழாயை மூடிவைக்கவேண்டும் இப்படி செய்யாத நிலையில் எலி,மற்றும் பூச்சிகள் செல்ல வாய்ப்புள்ளது. இருந்தாலும் அந்தப்பகுதி மக்களை தண்ணீரில் துர்நாற்றம்மற்றும் குப்பைகள் தென்பட்டால் பயன்படுத்தவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்