கஷ்டப்பட்டால் முடியாது: இஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியும் - நடிகர் தாமு பேச்சு

தேர்வில் கஷ்டப்பட்டு படித்தால் வெற்றி பெற முடியாது, இஷ்டப்பட்டு படித்தால்தான் வெற்றி பெற முடியும் என நடிகர் தாமு பேசினார்.

Update: 2020-02-20 22:15 GMT
திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வாழ்க்கை வழிகாட்டுதல் வேலை வாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வு மையம் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக் காக கனவு மெய்ப்பட என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மனோகரன் தலைமை தாங்கினார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் கோவிந்தராஜன், சுயநிதி பிரிவு இயக்குனர் அழகு சுந்தரம், உதவி செயலாளர் ராஜேந்திர பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவன் சேதுபதி ராஜா வரவேற்றார். மாணவன் பாண்டி செல்வம் அறிமுக உரை நிகழ்த்தினார். மாணவி ரின்சி பிரபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக நடிகர் தாமு கலந்து கொண்டு மிமிக்ரி செய்து பேசி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

அவர் பேசியதாவது:-

சினிமா வாழ்வது ரசிகர்களால் தான். மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் பணம் சினிமாவை வாழ வைக்கிறது. ஆகவே பெற்றோர்களின் உழைப்பு எங்களுக்கு வந்து சேருகிறது. நீங்கள் தான் எங்களுக்கு கடவுள். சினிமா 100 நாள் ஓட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதே சமயம் படிக்கிற பாடத்தில் 35 மார்க் எடுக்க கூட நினைப்பதில்லை. இதென்ன நியாயம்? மதுரை சாதாரண மனிதனையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நகரம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஞ்ஞானம் உள்ளது. முன்பின் தெரியாதவர்களை கதாநாயகனாக பார்க்கிறீர்கள். உண்மையிலே தங்களது தந்தை தான் கதாநாயகன்.

உறக்கத்தில் வருவது கனவு அல்ல. உறங்க விடாமல் செய்வது தான் கனவு என்றார் அப்துல் கலாம். நம் தூக்கத்தில் வருவது கனவு இல்லை. நினைவு தான் கனவு. அது மெய்ப்பட வேண்டும். கனவு மெய்ப்பட வேண்டும் என்பதற்காக 50 லட்சம் மாணவர்களை சந்திக்க உள்ளேன். அதில் தற்போது வரை 15 லட்சம் மாணவர்களை சந்தித்துள்ளேன். தேர்வில் மாணவர்கள் கஷ்டப்பட்டால் நடக்காது. இஷ்டப்ட்டால்தான் வெற்றிநடக்கும்.

மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை கூடாது. தாய், தந்தை, பேராசிரியர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றக் கூடாது. அப்துல் கலாம் கண்ட கனவு மெய்ப்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்