வாடகைக்கு விட்டு பணம் தருவதாக கூறி புரோக்கரிடம் 18 கார்கள் வாங்கி மோசடி கோவில்பட்டி வியாபாரி கைது

வாடகைக்கு விட்டு பணம் தருவதாக கூறி புரோக்கரிடம் 18 கார்களை வாங்கி மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-21 22:30 GMT
கோவில்பட்டி, 

வாடகைக்கு விட்டு பணம் தருவதாக கூறி புரோக்கரிடம் 18 கார்களை வாங்கி மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கார் புரோக்கர் 

மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 29). இவர் பழைய கார்களை வாங்கி, விற்கும் புரோக்கராக வேலை செய்து வருகிறார். கோவில்பட்டி பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் கோபிகண்ணன் (வயது 40). இவர் ஆன்–லைன் மூலம் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரமும், தனியார் நிறுவனங்களுக்கு கார்களை மாத வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமாருக்கும், அமர்நாத் கோபிகண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அமர்நாத் கோபிகண்ணன் தன்னிடம் பழைய மற்றும் புதிய கார்களை தந்தால், அதனை பெரிய நிறுவனங்களில் வாடகைக்கு விட்டு, மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் சம்பாதிக்கலாம் என்று சுரேஷ்குமாரிடம் கூறினார்.

மிரட்டல் 

அதன்படி, கடந்த 2018–ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுரேஷ்குமார் தன்னிடம் இருந்த பழைய கார்களையும், தன்னுடைய நண்பர்கள், உறவினர்களின் கார்களையும் வாங்கி, அமர்நாத் கோபிகண்ணனிடம் மாத வாடகைக்கு விடுமாறு கொடுத்தார். சுரேஷ்குமாரிடம் இருந்து மொத்தம் 18 கார்களை வாங்கிய அமர்நாத் கோபிகண்ணன், அவற்றை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு மாத வாடகைக்கு விட்டார்.

தொடர்ந்து அந்த கார்களின் மூலம் கிடைத்த வருமானத்தை சுரேஷ்குமாரிடம் மாதந்தோறும் வழங்கி வந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கார்களுக்கான வாடகையை அமர்நாத் கோபிகண்ணன் வழங்கவில்லை. இதுகுறித்து சுரேஷ்குமார், அமர்நாத் கோபிகண்ணனிடம் கேட்டபோது, வாடகையை தர மறுத்ததுடன், கார்களையும் திருப்பி தர மறுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

கைது 

இந்த மோசடி குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர்நாத் கோபிகண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 கார்களை மீட்பதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கைதான அமர்நாத் கோபிகண்ணனை போலீசார் நேற்று கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். வாடகைக்கு விட்டு பணம் தருவதாக கூறி புரோக்கரிடம் 18 கார்களை வாங்கி மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்