மசினகுடி, சிகூர், சிங்காரா வனப்பகுதிகளில், வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி - வனத்துறையினர் தீவிரம்

மசினகுடி, சிகூர், சிங்காரா வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2020-02-21 22:30 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, மசினகுடி, சிங்காரா வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங்களில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. அதன்பின்னர் பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழி வும் நிலவுகிறது. தற்போது மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியதால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. வனப்பகுதியில புற்கள் கருகி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு செல்லும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசிக் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி, சிகூர், சிங்காரா வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றும் பணியை நேற்று முதல் தொடங்கி உள்ளனர். இந்தப்பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 2 ஆயிரம் லிட்டர் முதல் 15 ஆயிரம் லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட தொட்டிகள் வனப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொட்டிகளில் வறட்சியான காலங்களில் வனத்துறையினர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி வனவிலங்குகளின் தாகத்தை தணித்து வருகின்றனர். தற்போது தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வெளி இடங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக வன ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து வனச்சரகர் காந்தன் கூறியதாவது:-

கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில நீர்நிலைகள் வறண்டு விட்டது. இதனால் வனவிலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில் முதுமலையின் வெளிவட்ட பகுதியான மசினகுடி, சிங்காரா, சிகூர் வனத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் தொட்டிகளுக்கு வந்து தண்ணீரை குடித்து தாகத்தை தணித்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் வரை தண்ணீர் ஊற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கோடை மழை பெய்து வறட்சியான காலநிலை மாறினால் அப்போதைய சூழலுக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றும் பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்