அவினாசி கோர விபத்தில் பலியான 19 பேரின் உடல்களும் ஒரே நாளில் பிரேத பரிசோதனை

அவினாசி கோர விபத்தில் பலியான 19 பேரின் உடல்களும் ஒரே நாளில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை இரவு வரை நீடித்தது.

Update: 2020-02-21 22:45 GMT
அனுப்பர்பாளையம், 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு கடந்த 19-ந்தேதி கேரள அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை பெரும்பாவூரை சேர்ந்த கிரீஸ்(வயது 43) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவர் பைஜூ என்பவரும் அந்த பஸ்சில் இருந்தார். அந்த பஸ்சில் 12 பெண்கள் உள்பட 48 பேர் பயணம் செய்தனர். அந்த பஸ் நேற்று முன்தினம் அதிகாலை அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த டிரைவர்கள் உள்பட 19 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

விபத்தில் பலியான 19 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் விவரம் அறிந்து அவர்களது உறவினர்கள் கேரளாவில் இருந்து திருப்பூருக்கு விரைந்து வந்தனர். திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அங்கு பலியான தங்கள் உறவினர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

பின்னர் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, இணை இயக்குனர் சாந்தி, கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டனர்.

இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. டாக்டர் செந்தில்குமார் தலைமையில் டாக்டர்கள் முத்துவேல், ரவிசங்கர், ஹரிகரசுதன், கார்த்திக்குமார், தீபாஆனந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக நர்சுகளும், மருந்தாளுனர்களும், துப்புரவு பணியாளர்களும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக பிரேத பரிசோதனை மாலை 6 மணி வரை நடைபெறும். ஆனால் நேற்று முன்தினம் இந்த பிரேத பரிசோதனை இரவு 7.30 மணி வரை நீடித்தது. 19 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் ஒரே நாளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு 18 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரண்குமாரின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த கோர விபத்தில் காயம் அடைந்து திருப்பூர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 20 பேர் நேற்று தங்கள் உறவினர்களுடன் கேரளா திரும்பினர். திருப்பூர் பகுதிகளில் 3 பேரும், கோவை தனியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்