புதுச்சேரி தலைமை செயலாளர் மாற்றம்?

புதுவை தலைமை செயலாளர் மாற்றப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Update: 2020-02-22 00:23 GMT
புதுச்சேரி,

புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதலில் உயர் அதிகாரிகள் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார்கள்.

இந்த அதிகார மோதல் காரணமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அரசுத்துறை இயக்குனர்கள் போன்ற உயர் அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்துறை அமைச்சகத்தில் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாநில தேர்தல் ஆணையர் விவகாரத்தில் புதிய நபரை தேர்ந்தெடுக்க விளம்பரம் வெளியிட்டது தொடர்பாக சட்டமன்ற உரிமை மீறல் குழுவில் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உரிமை மீறல் குழு தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், உள்ளாட்சித்துறை செயலாளர் அசோக்குமார், இயக்குனர் மலர்க்கண்ணன், சார்பு செயலாளர் கிட்டி பலராம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தியது. இதனால் அந்த அதிகாரிகள் மனவேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவின.

அவருக்கு பதிலாக டெல்லியில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரேணு சர்மா என்ற பெண் அதிகாரி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவலை அரசு வட்டாரங்கள் உறுதி செய்யவில்லை.

மேலும் செய்திகள்