கோவை மாநகராட்சியில் மக்காத கழிவுகளை சேகரிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சியில் மக்காத கழிவுகளை சேகரிப்பதற்காக 5 புதிய வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

Update: 2020-02-22 23:30 GMT
கோவை,

கோவை மாநகராட்சியில் மக்காத கழிவுகளை சேகரிப்பதற்காக ரூ.37 லட்சத்து 40 ஆயிரம் செலவில் 5 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களின் தொடக்க விழா கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 23-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கிடாச்சலம் சாலையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இந்த பகுதியில் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை அமைச்சர் தொடங்கிவைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல்கள், சறுக்கு மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளுடன் அமைச்சர் சிறிது நேரம் உரையாடினார்.

மறுசுழற்சி மையம்

இந்த விழாவில் மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில் அரசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என நாள்ஒன்றுக்கு 800 முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிக்க 59 இடங்களில் மண்புழு உரம் தயாரிப்பு கூடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. மக்காத குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் மற்றும் கவுண்டம்பாளையத்தில் உள்ள மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், தெர்மகோல் உள்ளிட்ட கழிவுகளை சேகரிப்பதற்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்